விபத்துக்கு பின் வனத்துறை விழிப்பு

தீவுகளில் ஆட்களை தங்க வைத்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, அரசுக்கு வனத்துறை பரிந்துரை செய்துள்ளது. ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் டிச. 26ல் நடந்த படகு விபத்தில் பலர் பலியாகினர். அருகில் உள்ள முள்ளித்தீவுக்கு அனுமதியின்றி சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த இவ்விபத்திற்கு, போதிய கண்காணிப்பு இல்லாதது முக்கிய காரணம். மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளும் வனத்துறையின் கண்காணிப்பில் இருப்பதால், இச்சம்பவம் நெருக்கடியை தந்துள்ளது. இதிலிருந்து விடுபடும் விதமாக, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முதற்கட்டமாக தீவுகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வனத்துறை வசம் உள்ள 52 பார்வையாளர்களால், தீவுகளை முழுமையாக கண்காணிக்க முடியாது. ஆட்கள் தேர்வு செய்து, தீவுக்கு இரண்டு பேரை தங்க வைக்க உள்ளனர். அதற்கான கட்டமைப்பு வசதி செய்து தரப்படும். தீவுகளை ஒன்றிணைக்கும் பாதுகாப்புக்கு ஐந்து அதிவேக படகுகள் வாங்க உள்ளனர். நாட்டு படகுகளை பயணத்திற்கு கொண்டு செல்வதை தடுக்க, மீனவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வனஉயிரினக்காப்பாளர் சுந்தரக்குமார் கூறியதாவது: தீவுகளில் ஆட்களை தங்க வைத்து பாதுகாக்க உள்ளோம். இதற்காக புதிதாக ஆட்களை தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. அதிவேக படகுகள் கேட்டு அரசுக்கு பரிந்துறைத்துள்ளோம். கல்லூரி மாணவர்கள், என்.ஜி.ஓ.,களை வைத்து கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகளும் கண்காணிக்கப்படும், என்றார். இவற்றை வனத்துறையினர் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்பலியை தவிர்த்திருக்கலாம்.
- தினமலர் -

எடையளவு சட்டத்தை பின்பற்றுவதில் "கல்தா' : 70 வணிகர்கள் மீது முரண்பாடுகள் பதிவு

ராமநாதபுரத்தில் எடையளவு சட்டத்தை பின்பற்றுவதில் "கல்தா' தருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. நகராட்சிகளான ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரையில் இதன் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பொருட்கள் விற்பனையில் எடை என்பது நுகர்வோருக்கு அவசியமானதாகும். பெரும்பாலான கடைகளில் எடை போடுவதில் குளறுபடிகள் இருந்து வருகிறது. எலெக்ட்ரானிக் தராசுகள் புழக்கத்தில் வந்தும், இவை தொடர்வது தான் வேதனைக்குறியதாகும்.


காய்கறி, மீன், பழம், மட்டன், கோழி இறைச்சி கடைகளில் அதிக அளவில் எடையளவு சட்டம் மீறப்படுகிறது. இதனால் நுகர்வோரின் பணம் ஏமாற்றப்படுவதுடன், குறைந்த தேவையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மாவட்டத்தில் இது குறித்த ஆய்வுகள் குறைவாக நடக்கிறது. எப்போதாவது அதிகாரிகள் உத்தரவிடும் போது தான் இங்குள்ள அதிகாரிகள் ஆய்வுக்கு புறப்படுகின்றனர். அவ்வாறு செல்லும் போது, கைக்கு அடங்காத அளவுக்கு போலிகள் சிக்குகின்றன . இதே ஆய்வை முறைப்படி தொடர்ந்தால், மாவட்டத்தில் நிச்சயம் தரமான பொருட்கள் புழக்கத்தில் வர வாய்ப்புள்ளது. கடந்த வாரம் கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் படி மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வாளர் அய்யனார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தங்கச்சிமடம், ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி பகுதியில் நடந்த ஆய்வில் , தரம் இல்லாத, மறுமுத்திரையிடாமல் வியாபாரத்தில் பயன்படுத்தி 125 பொருட்களை பறிமுதல் செய்தனர். மறுமுத்திரையிடாத எடையளவு பயன்படுத்திய காரணத்திற்காக 42 வணிகர்கள் , பொட்டலப்பொருட்கள் விதிகளை அனுசரிக்காத 28 வணிகர்கள் மீது மேல்நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் 70 வணிகர்கள் சிக்கியுள்ளனர். வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

-தினமலர்-

கடைகளில் தொடரும் நூதன திருட்டு சம்பவம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைகளை உடைத்தும் நூதன முறையிலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் திருட்டு, வழிப்பறி, வீடுபுகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் சீசன் போல் குறிப்பிட்ட காலத்தில் அதிகமாக நடக்கிறது. கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளை குறிவைத்து சில கும்பல் தங்கள் கைவரிசையை காண்பித்து வந்தன . கடைகளில் திருடப்பட்ட பணம் கணக்கு காண்பிக்க நடந்த முயற்சி என ஒருபக்கம் கூறினாலும், திருடர்களை பிடிக்கமுடியாத சூழலில் இதுபோன்ற ஏதாவது ஒரு தகவல்களை பரப்பிவிடும் டெக்னிக்குகளையும் போலீசார் வைத்துள்ளனர்.

இந்நிலையில்தான்,கடந்த தினங்களுக்கு முன் ராமநாதபுரம் காய்கறி மார்க்கெட் சந்தில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட் கடையில், ஆரவாரமின்றி கடை கதவை திறந்து சாவகாசமாக பணத்தை திருடி சென்றுள்ளது ஒரு மர்ம கும்பல். இதேபோல் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ராமதாஸ் என்பவரின் நகை பட்டறையில் 11 ஜோடி கொலுசு, வெள்ளி என கையில் கிடைத்ததை வாரி சுருட்டி சென்றது. இதுபோன்று கடைகளை குறிவைத்து திருடும் சம்பவம் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் பஜார் பகுதியில் அதிகரித்து வருகிறது. திருட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் வழக்கம் போல் போலீசார் மந்தநிலையில் இருந்தாலும், குற்றவாளிகளை பிடிக்க அதிகம் செலவாகிறது என கூறி, பறிகொடுத்தவர்களிடமே கணிசமாக கறந்துவிடுகின்றனர்.



ஏற்கனவே பொருளையும் பணத்தையும் பறிகொடுத்தவர்கள் ,போலீசாரின் வசூலுக்கும் பயந்து எங்கே கொடுக்காவிட்டால், மேலும் திருட்டு அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் கேட்பதை கொடுக்கும் நிலையில் உள்ளனர். முன்பெல்லாம் அவசர போலீஸ் இரவு பகலாக ரோந்து சுற்றிவந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடித்து சாதனை படைத்தனர். தற்போது அவசரபோலீஸ் இருக்கிறார்களா? ரோந்து சுற்றுகிறார்களா என்பதே தெரிவில்லை. இதன்காரணமாகத்தான் தற்போது திருட்டு சம்பவங்கள் சர்வசாதரணமாக அதிகரித்து வருகிறது.

தினமலர்

வி.ஏ.ஒ., தாலுகா அலுவலகங்களை சுற்றி ஏஜன்டுகள் போல் டேரா

கிராமங்களில் அலுவலகங்களை வைத்து கொள்ளாத வி.ஏ.ஒ.,க்கள் , தாலுகா அலுவலகத்தை சுற்றி ஏஜன்டுகள் போல் தனியார் கட்டடங்களில் வாடகை அறையில் அலுவலகத்தை வைத்துள்ளதால், மக்கள் சான்றிதழ் பெற ராமநாதபுரம் வரும் நிலை தொடர்கிறது.



கிராமப்பகுதிகளில் அலுவலகங்கள் அமைத்து மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெறுவதற்கு வி.ஏ.ஒ.,க்கள் உதவ வேண்டும். இதற்காக கிராமங்களில் வி.ஏ.ஒ., அலுவலக கட்டடங்களை அரசே கட்டி கொடுத்துள்ளது. ஆனால் தற்போது கிராமங்களில் உள்ள வி.ஏ.ஒ.,க்கள் பலர் நகரங்களில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து அலுவலக பணிகளை பார்க்கின்றனர். (அறைக்கு வாடகை யார் கொடுக்கின்றனர் என்பது தனி கேள்வி) தற்போது விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் போன்றவைகளுக்கு சிட்டா வாங்கவும், மாணவர்கள் சாதி சான்றிதழ் வாங்கவும், கர்ப்பிணி உதவி தொகைக்கு சான்றிதழ் பெறவும் முயற்சிக்கும் போது, லாட்ஜ்களில் உள்ள வி.ஏ.ஒ.,க்களை பஸ்சில் சென்று பார்த்து வாங்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். பஸ்சில் பயணித்தும் வி.ஏ.ஒ., இல்லை என்றால் இரண்டு மூன்று முறை அலைய வேண்டிய அவலநிலையில் உள்ளனர்.



முதியோர் ஓய்வூதியம் வாங்குவோர் வயதான காலத்தில் பஸ் பிடித்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். சில இடங்களில் லாட்ஜ்களில் வி.ஏ.ஒ.,க்கள் தங்களுக்கு என இரண்டு மூன்று உதவியாளர்களை வைத்து கொண்டு தனி வசூல் வேட்டையும் நடத்துகின்றனர். ராமநாதபுரத்தில் வழிவிடுமுருகன் கோயில் அருகே உள்ள தனியார் கட்டடத்திலும் வண்டிக்கார தெருவில் படக்கடை அருகில் உள்ள தனியார் கட்டடத்திலும் இதுபோல் ஏராளமான வி.ஏ.ஒ.,க்கள் அறை எடுத்து அலுவலகம் நடத்துகின்றனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் அருகிலே, இதுபோல் நடக்கும் கூத்தை தாசில்தாரும் கண்டுகொள்ளவில்லை, கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதில்லை. சான்றிதழுக்காக அலைய வைப்பதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சில இடங்களில் அதிகாரிகளின் பெயரை கூறி பங்கு தரவேண்டும் என்ற பெயரில், வி.ஏ.ஒ.,க்கள் தங்கியிருக்கும் லாட்ஜ்களில் புரோக்கர்கள் ஆதிக்கமும் அதிகரித்துவிட்டது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி, அந்தந்த கிராமங்களில்வி.ஏ.ஒ.,க்கள் தங்கி அலுவல்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர்

வெள்ளத்தை பார்வையிடுவதால் என்ன பயன்?

வெள்ளத்தை பார்வையிட்டு சென்ற மக்கள் பிரதிநிதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு, ராமநாதபுரம் நகர்வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் வெள்ளத்தில் மிதப்பது ராமநாதபுரத்தின் சோக கதையாகும். இந்த காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் கார்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கு சென்று பார்ப்பதும், அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. வந்து சென்ற பின், அதை தடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அவலத்தை பார்வையிட வருவதே இதற்கு சாட்சி. வறட்சியில் சிக்கியவர்களுக்கு உதவுவதை போல உணவுகள், ஆடைகள், பணம் வழங்குகின்றனர். இதனால் வீடுகளில் தேங்கிய மழைநீர் வடிந்து விடுமா? அதனால் சந்திக்கும் வேதனைகள் மறைந்துவிடுமா? இது போன்ற பாசாங்கு பரிகாரங்கள் செய்வதற்கு பதிலாக, ஹசன் அலி எம்.எல்.ஏ., போல வராமல் இருப்பதே மேல். இம்முறையும் மழையில் மூழ்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை அமைச்சர் தங்கவேலன், ரித்திஷ்குமார் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரராமவன்னி ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். அதன் பின் நாட்களும் கடந்துவிட்டன. இன்று வரை பல பகுதிகளில் நீரை வெளியேற்றும் நடவடிக் கைகள் மேற்கொள்ளவில்லை. நிவாரணம் பெற்றுதர அவர்கள் முன்வரும் பட்சத்தில், அதை வைத்து குளறுபடி செய்ய ஒரு கூட்டம் புறப்படுகிறது. அறிவிப்புக்கு முன்பே, நிவாரணம் பெற்றுத்தர வசூல் வேட்டை நடத்திய சம்பவமும் சமீபத்தில் தான் நடந்தது. நீரை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் கரைக்கப்படுகிறது. இப்படி ஒரு வருமானம் இருப்பதால் தான் , நிரந்தர தீர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதுவரை நீரை வெளியேற்ற செய்த செலவில் அருமையான திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.

மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது நன்றாக தெரியும். இவர்களாவது அடுத்த முறை பார்வையிடும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்களா என்பதை பார்க்கலாம்

தினமலர்

பத்திர பதிவு அலுவலகங்களில் மீண்டும் புரோக்கர்கள் ஆதிக்கம்

பத்திரபதிவு அலுவலகங்கள் வெவ்வேறு இடத்தில் உள்ளதால், கண்காணிப்பு குறைபாடு காரணமாக, புரோக்கர்களின் ஆதிக்கம் மீண்டும் சத்தமின்றிஅதிகரித்து வருகிறது. ராமநாதபுரத்தில் பத்திரபதிவு அலுவலகம்தான் ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் உள்ள அலுவலகமாக மாறி வருகிறது. இடம் விலையும் கிர்னு... ஏறுவதால், வாங்குவோரும் விற்போரும் அதிகரித்துவிட்டனர். வயல்வெளிகள் எல்லாம் பிளாட்டுகளாக மாறியதின் விளைவு ,இன்று பல இடங்களின் குடியிருப்புகளில் உள்ள மழைநீரை கடத்த முடியாத அவலத்தில் மக்கள் உள்ளனர்.

பத்திரபதிவு அலுவலகங்கள் கம்ப்யூட்டர்மயமாகி விட்ட நிலையில், தனிதனியாக வெவ்வேறு இடங்களில் அலுவலகங்களை இருப்பதும், ஒரு இடத்தில் அதிக பதிவுகளும், மற்றறொரு இடத்தில் பதிவே இல்லாமல் பணியாளர்கள் தூங்குவதுமாக உள்ளது. பதிவு அதிகம் உள்ள அலுவலகம் சந்து பொந்துகளில் அதிகாரிகள் எளிதில் ஆய்வுக்கு செல்ல முடியாத வகையில் அமைத்துள்ளனர். இதனால் புரோக்கர்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது. ஆய்வு அதிகாரி வந்தால் உடனடியாக தகவல் தெரியும் வகையில் உள்ளதால், இங்கு நடப்பதை கண்டுபிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசாரே திணறுகின்றனர். மேலும், மாவட்ட பத்திரபதிவு அலுவலகம், மற்றும் மற்ற மூன்று பதிவு அலுவலகங்களை ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வந்தால், ஒரளவு முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும். அதிகாரிகள் பார்வையில் இருந்தால், கீழ் மட்ட ஊழியர்கள், புரோக்கர்கள் தலையீடு இல்லாமல், நேர்மையான முறையில் பத்திரபதிவு நடக்க வாய்ப்பு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன், புரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்து , இடமதிப்பு குறைப்பதும், கூட்டுவதையும் தவிர்க்க முடியும்.

தற்போது வண்டிக்கார தெரு பத்திரபதிவு அலுவலகம் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதை இடித்து இங்கு புதிய கட்டடம் கட்டி, மாவட்ட பத்திரபதிவு அலுவலகம், மற்றும் மூன்று பத்திரபதிவு அலுவலகங்களை இங்கு கொண்டு வந்தாலே, நேரடி கண்காணிப்பில் பதிவுகளும் முறையாக நடக்க வாய்ப்பு உள்ளது.

தினமலர்

தேர்தலின் போது மட்டுமே வருவது எப்படியோ ?

மூன்று பள்ளிகள் உள்ள ராமநாதபுரம் ஒன்பதாவது வார்டு பகுதியில் மழைநீரும் கழிவுநீரும் தேங்கி மாணவர்கள் விழுந்து செல்லும் அவலத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், கார் வரமுடியாததால் வரமுடியாத நிலையில் உள்ளதாக மக்கள் பிரதிநிதிகள்கூறும் நிலையில் ,தேர்தலின் போது மட்டும் வருவது எப்படி சாத்தியமாகிறது என மக்கள் கேள்விவிடுக்கின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் மழை காரணமாக மக்கள் கடும் அவஸ்தைப்பட்டாலும் ஆறுதல் கூறகூட மக்கள் பிரதிநிதிகள் வராலையே என்கின்றனர் மக்கள். கேணிக்கரை ஒன்பதாவது வார்டு செட்டிய தெருவில் மழைநீரானது கழிவுநீருடன் கலந்து, இடுப்பளவு தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நடந்து செல்வோரும் தடுமாறி விழுந்து செல்கின்றனர். இதுகுறித்து

இப்பகுதி மக்களின் ஆதங்கம் :

சூரியமூர்த்தி: இப்பகுதியில் மூன்று பள்ளிகளுக்கு தினமும் இவ்வழியாக ஆயிர கணக்கான மாணவ மாணவிகள் செல்கின்றனர். ரோட்டில் நிற்கும் தண்ணீல் மாணவிகள் தினமும் விழுந்து செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது. கவுன்சிலரிடம் கூறினால் சண்டைக்கு வருவது போல் பேசுகிறார்.

சதிஷ்குமார்: ஆயிர வைசிய சமூகநலசங்கம் சார்பில் மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை. மக்கள் பிரதிநிதிகள் யாரும் இப்பகுதி மக்களின் அவலத்தை காணகூட வரவில்லை. கேட்டால் கார் வரமுடியாத பகுதிகளில் இறங்கிவரமுடியாதாம். மாணவ மாணவிகளின் நலன் கருதியாவது பார்வையிட வந்திருந்தால் மக்கள் ஒரளவு ஆறுதலாக இருந்திருப்பர்.

கமலகண்ணன்: ஆண்டுதோறும் இதே பிரச்னைதான். பாதாள சாக்கடை திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பது இதிலிருந்தே தெரிகிறது. நிவாரணம் என்ற பெயரில் பெயருக்கு சில இடங்களுக்கு வந்து செல்லும் மக்கள் பிரதிநிதிகள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

மஞ்சுளா: வீடுகள்தோறும் கழிவுநீர் புகுந்து காய்ச்சல் பரவதுவங்கிவிட்டது. ரோடுகளில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களில் பச்சிளம் குழந்தைகள் விழுந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜேஸ்வரி: தேர்தலின் போது மட்டுமே வரும் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் கஷ்டப்படும்போதும் வந்து உரிய தீர்வு காணவேண்டும்.

- தினமலர் -