கான்சாகிப் தெரு மக்கள் சுகாதாரகேட்டால் பாதிக்கும் அபாயம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டாலும், வீட்டுக்குள் நுழையும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ராமநாதபுரம் கான்சாகிப் தெரு மக்கள் சுகாதாரகேட்டால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் செய்த பாவம்தான் என்ன? சொந்த மண்ணில் அடிப்படை வசதிக்காக ஏங்கும் இவர்களின் நிலைக்கு என்றுதான் தீர்வோ? என கேள்வி கனைகளை தொடுக்கின்றனர் இப்பகுதி குடியிருப்போர் . சிறு மழை பெய்தாலே இப்பகுதி மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது .



இவர்கள் தங்கள் பிரச்னைகளுக்காக பார்க்காத அதிகாரிகள் இல்லை. உள்ளூர் அரசியல் வாதிகள் இல்லை. இருந்தும் தீர்வுதான் எட்டவில்லை . இதோ பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள்...

அகம்மது: மழை காலங்களில் நடந்து செல்லவே முடியாது. இங்குள்ள ஊரணியில் சின்னகடை வீதி, பாரதிநகர், குமரய்யா கோயில் பகுதி கழிவுநீர் சங்கமிப்பதால், 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. மழையின்போது கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுகிறது.

சுமதி: வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கை கால்களில் ஒருவித அரிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால், தொற்றுநோய் பரவுகிறது. மழை காலங்களில் படகு மூலம்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நஜிமாபேகம்: குப்பை அள்ள யாரும் வருவதில்லை. இது தொடர்பாக ஒன்றரை ஆண்டுகளாக புகார் தெரிவித்துவிட்டோம். யாரும் கண்டுகொள்ள வில்லை . குப்பைகள் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. குறைகளை கவுன்சிலர் முதல் அதிகாரிகள் வரை கூறி அலுத்து விட்டோம்.

முகம்மதுமைதீன்: சாதாரண நாட்களிலே குடிநீருக்காக கடும் அவஸ்தை படுகிறோம். மழை காலங்களில் லாரிகள் வராததால், கழிவுநீரில் நடந்து சென்று குடிநீர் எடுக்க வேண்டிய அவலநிலையில் உள்ளோம்.

உம்முல் ஜரீனா: காய்ச்சல், அரிப்பு புண் ஏற்படுவதால் பலரும் வீடுகளை காலிசெய்து வெளியேறுகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கழிவுநீர் கலந்த மழைநீரில் நடந்து செல்லும் அவலநிலையில் உள்ளனர். ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களும் வரமுடியாத நிலை உள்ளதால், இங்கு வசிப்போர் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம்,என்றார்.

அபோனில் சொல்லுங்கள்,நேரில் வருகிறோம்

குடியிருப்போர் சங்க நிர்வாகிகளே...பொதுமக்களே.. உங்கள் பகுதியில் தீராத பிரச்னைகள் இருக்கிறதா? எத்தனை முறை புகார் கூறியும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் எட்டி பார்க்கவில்லையா?

தினமலர் சிறப்பு நிருபர்

குழு உங்கள் பகுதி பிரச்னைகளை படம் பிடித்துக் காட்ட தயாராக இருக்கிறது. 04567-223 055 க்கு காலை 9.30 முதல் 10.30 க்குள் போன் செய்யுங்கள்.